டெல்லி : நாட்டின் பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல், இந்திய- சீன எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களை குறைப்பது சாத்தியமல்ல என்று முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் (Bipin Rawat) எச்சரித்துள்ளார்.
மேலும், “அணு ஆயுதம் கொண்ட அண்டை நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதில் "நம்பிக்கை" இல்லாமை மற்றும் "சந்தேகம்" அதிகரித்து வருகின்றன. இரு அண்டை நாடுகளின் ராணுவ உயர்மட்ட அதிகாரிகளின் சமீபத்திய சந்திப்பு எல்லை மோதலை தணிக்க முன்மொழிவதில் எந்த முடிவையும் தரவில்லை” என்றும் கூறினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “சீனா இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஆகையால், இந்திய- சீன எல்லையில் பாதுகாப்பில் உள்ள இந்திய வீரர்களை குறைக்க இயலாது” என்றார்.
அதேநேரம் சீனா இந்தியாவிற்குள் கிராமங்களை உருவாக்குகிறது என்ற குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்தார். இது குறித்து பிபின் ராவத் கூறுகையில், “ இது உண்மையல்ல, உண்மையான கட்டுப்பாட்டுக் பகுதிகளில் சீன ஆக்கிரமிப்பு இல்லை. தனது எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் மட்டுமே சீனா கிராமங்களை அமைக்கிறது, எல்லை மீறவில்லை” என்றார்.