கன்னட திரையுலகின் பவர் ஸ்டாராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் பழம் பெரும் நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார். இந்நிலையில், இன்று (அக்.29) காலை புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இசிஜி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.
இந்நிலையில், சிகிச்சை பலன்றி புனித் ராஜ்குமார் (46) உயிரிழந்தார். அவருக்கு வயது 46. அவரது மறைவு கன்னட திரையுலகினர் மட்டுமல்லாது இந்திய திரையுலகினரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் மட்டுமல்லாமல், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் புனித் ராஜ்குமார். 29 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர், 1975 ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புனித் ராஜ்குமாரின் மறைவையடுத்து அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் குறித்து கேள்விப்பட்டு ஆழ்ந்த அதிர்ச்சியும் திகைப்பும் ஏற்பட்டது. அவரது குடும்பத்துடன் பல ஆண்டுகளாக நட்பில் இருந்தேன். எனவே அவரது உயிரிழப்பு எனக்கு தனிப்பட்ட இழப்பு எனத் தெரிவித்துள்ளார்.
கேரள முதலமைச்சர் பிரணாப் விஜயன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், புனித் ராஜ்குமார் உயிரிழந்தது மிகுந்த வருத்தம். கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் எனத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கர்நாடகாவின் மிகவும் பிரபலமான சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் இப்போது நம்மிடையே இல்லை. இது எனக்கு ஒரு பெரிய தனிப்பட்ட இழப்பு. இந்த இழப்பை தாங்கும் சக்தியை ராஜ்குமார் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கன்னட பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் உயிரிழப்பு!