புதுச்சேரி: புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.90 கோடி செலவில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக ஆரியப்பாளையம் அருகே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ.25 கோடி செலவில் மேம்பாலம் கட்டும்பணி நடைபெற்று வருகின்றது. இதன் தளம் அமைக்கும் பணி துவங்கியது.
இதை முதல்வர் ரங்கசாமி ஆய்வு செய்து, பின்னர் அவரே பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தேனீ ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் அனைத்து சாலைகளையும் செப்பனிடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் மேம்பாட்டு நிதிக்கு ரூ.35 கோடி ஒதுக்கீடு செய்து நகரின் உட்புரச்சாலைகளை செப்பனிட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. மேலும் காரைக்கால் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. ஆகையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்தார். மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி மற்றும் லேப்டாப் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "தப்பு பண்ணா திருத்த வழி பண்ணனும்; பயப்படக் கூடாது" - பெண்ணுக்கு அறிவுரை கூறிய அரசு ஊழியர் ஆடியோ!