டெல்லி: மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் வீடியோ நேற்று வெளியாகி வைரலான நிலையில், அந்த வீடியோ குறித்து உச்ச நீதிமன்றம் இன்று (ஜூலை 20) தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது வீடியோ குறித்து பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “இது மிகவும் கவலையளிக்கிறது. அதில் அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால் நீதிமன்றம் தலையிடும்” என தெரிவித்து உள்ளார்.
மேலும், அரசியலமைப்பு ஜனநாயகத்தில் இது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று கூறிய தலைமை நீதிபதி, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
மேலும், “கலவரங்களில் பெண்களை ஆயுதமாக பயன்படுத்தப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. இது மிகவும் கவலையளிக்கிறது. இது மனித உரிமை மீறல்களில் மிகப் பெரியது. நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திற்கு சிறிது அவகாசம் கொடுங்கள். இல்லையெனில் நாங்கள் (நீதிமன்றம்) நடவடிக்கை எடுப்போம்.
நேற்று வெளியான வீடியோ மே மாதத்தின் வீடியோ. இது நேற்றைய வீடியோவாக இருக்க வேண்டியதில்லை” என்று தலைமை நீதிபதி கூறினார். இது குறித்து நீதிமன்றத்தில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோரிடம், குற்றம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த மே மாதம் முதல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், இது மீண்டும் நடக்காமல் இருக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் தலைமை நீதிபதி கேட்டார்.