ராய்ப்பூர்:ஒடிசாவைச் சேர்ந்த சேர்மன் மஞ்சி, தனது மனைவி துலாரி பாயுடன் சத்தீஸ்கரில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்ததை அடுத்து, அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், கோழிப்பண்ணையின் உரிமையாளர், கார் மூலம் அவர்களை ஒடிசாவிற்கு அழைத்துச் செல்லகடந்த சனிக்கிழமை முற்பட்டார். ஆனால், ஒடிசா காவல் துறையினர் அவர்களுக்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து, இவர்கள் ரயில் மூலம் ஒடிசாவிற்கு செல்லத் திட்டமிட்டு மதியம் 2.30 மணியளவில் மகாசமுண்ட் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தனர். இந்நிலையில் சேர்மன் மஞ்சி ரயில் நிலையத்திலேயே எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியில் ஆழ்ந்து, செய்வதறியாது தவித்த துலாரி பாய், அருகில் இருந்த ரயில்வே அலுவலர்களையும் காவலர்களிடம் உதவி கோரியுள்ளார். ஆனால் அவர்கள் மனமிறங்காத நிலையில், உதவி செய்யுமாறு துலார் பாய் மிகவும் வற்புறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார். அப்போதும் கரோனா அச்சத்தில் இருந்த அவர்கள் உதவ மறுத்துள்ளனர்.