தந்தேவாடா: சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் உபேட் கிராமத்தில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. மே21 அன்று பிறந்த 45 நாள்களே ஆன பச்சிளம் குழந்தையை காணவில்லை எனக் குழந்தையின் குடும்பத்தினர் பதறிப் போய் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அக்குழந்தையின் தந்தை தான் குற்றவாளி எனத் தெரியவந்தது. இதனையடுத்து எவ்வாறு கொலை நடந்துள்ளது என்று காவல்துறையினர் தெரிவிக்கையில், யூடியூப்பை பார்த்து தான் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
முதலில் குழந்தையை கடத்தி சென்று, கிராமத்திற்கு வெளியே சாலையின் கீழ் உள்ள வாய்க்கால் பகுதியில் வைத்துள்ளார். பின்னர் மறுநாள் அந்த வாய்க்காலுக்கு சென்று, குழந்தையை தூக்கி அருகிலிருந்த குளத்தில் வீசி உள்ளார். இந்நிலையில் குழந்தையை காணாமல் தவிக்கும் குடும்பத்தினரிடமும், பகுதி மக்களிடமும் எதையாவது சொல்லி அவர்களை நம்ப வைக்க வேண்டும் என்று எண்ணிய கொடூரத் தந்தை, ஒரு துணியில் கோழியின் ரத்ததை நனைத்து அதை வீட்டின் வெளியே போட்டுவிட்டார்.