ராய்பூர்:சத்தீஸ்கர் மாநிலத்தில் 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த மாதம் 7 மற்றும் 17ஆம் தேதி இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. இதில் 76.31 விழுக்காடு வாக்குகள் பதிவான நிலையில் அந்த வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலையில் இருந்த நிலையில் 11 மணிக்கு மேல் பாஜக கூடுதல் இடங்கள் கிடைத்து வருகிறது. அதன்படி பாஜக 51 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 34 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில பாஜக தலைவர் அருண் சாவ், 'சத்தீஸ்கரில் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியைப் பிடிக்கும்' எனவும் அதற்காக மக்களின் ஆதரவு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரில் பதான் தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பகேல் 187 வாக்குகள் வித்தியாசத்தில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் விஜய் பகேலை விட முன்னிலை வகிக்கிறார். அதேபோல, பாஜக மாநில தலைவர் அருண் சாவ் போட்டியிட்ட லோர்மி தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தானேஷ்வர் சாஹூவைக் காட்டிலும், 2,376 வாக்குகள் பெற்றும் முன்னிலை வகிக்கிறார்.