டெல்லி : சத்தீஸ்கரில் விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என துணை முதலமைச்சர் சிங் தியோ தெரிவித்து உள்ளார். அண்மையில் பீகாரில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில் சாதி வாரியான கணக்கெடுப்பின் முடிவுகளை அம்மாநில அரசு, காந்தி ஜெயந்தி (அக்.02) அன்று வெளியிட்டது.
அதன்படி, பீகார் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகை 13 கோடியே 7 லட்சத்து 25 ஆயிரத்து 310 என தெரிய வந்தது. பீகார் அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "பீகார் மாநிலத்தில் மொத்தம் 13.07 கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் பொது பிரிவினர் (General category) 15.52 சதவிகிதம் பேரும், பிற்படுத்தப்பட்டோர் (Other Backward Caste-OBC) 27.13 சதவிகிதம் பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (extremely backward class) 36.01 சதவிகிதம் பேரும் இருப்பது தெரிய வந்தது.
மேலும், பட்டியலின வகுப்பினர் (Scheduled Castes) 19.65 சதவிகிதம் பேரும், பழங்குடியினர் (Scheduled Tribes) 1.68 சதவிகிதம் பேரும், மாநிலத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. பீகார் மாநிலத்தை தொடர்ந்து தற்போது மற்ற மாநிலங்களும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டு உள்ளன.
ராஜஸ்தானில் நடப்பாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ள நிலையில், அதற்கு முன்னதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் அசோக் கெலாட் உத்தரவிட்டு உள்ளார். முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் ஆளும் மற்றொரு மாநிலமான சத்தீஸ்கரிலும், விரைவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பேசிய சத்தீஸ்கர் மாநில துணை முதலமைச்சர் சிங் தியோ, பொருளாதார நிலைக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் அரசின் திட்டங்கள் போய் சேர வேண்டிய மக்களை கண்டறிய விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
பீகாரை தொடர்ந்து ராஜஸ்தானிலும், தற்போது சத்தீஸ்கரிலும் சாதிவாரி கணக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டு இருப்பது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான யுக்தியா என்றும் எண்ணப்படுகிறது.
இதையும் படிங்க :ராஜஸ்தானில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு உத்தரவு! காங்கிரஸ் அரசு போடும் திட்டம் என்ன?