தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு அனுமதி, ஆனால்... - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி! - Chennai High Court allows admk election

அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்த எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், தேர்தலை நடத்த அனுமதி அளித்த உயர் நீதிமன்றம், தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது என்று கூறி வழக்கை 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 19, 2023, 1:36 PM IST

சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் ஓயாத அலைபோல் தொடர்ந்து வீசி வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதேநேரம், அதிமுக உரிமையியல் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் வரும் 26ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி நேற்று (மார்ச்.18) வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு தொடர்ந்தது.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. ஓ.பி.எஸ். தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் ஆணையம் இன்னும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை அங்கீகரித்து வருவதாகவும், இந்த சூழலில் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு புதிய விதிகளை அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

மேலும், இந்த விதிகளால் அடிப்படை உறுப்பினர்கள் யாரும் போட்டியிட முடியாது என்ற நிலை உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார். வேட்புமனு தாக்கல் இன்று மாலையே நிறைவு பெற்றதாக கூறி பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கக்கூடும் என்றார். எனவே, இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 1 கோடியே 50 லட்சம் உறுப்பினர்களில் அதிமுகவில் இருப்பதாகவும், அதில் ஓ.பி.எஸ்.க்கு ஒரு சதவீதம் கூட ஆதரவு கிடையாது என்று கூறினார். தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கி விட்டதால் நீதிமன்றம் இதில் தலையிட முடியாது என்று தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கை ஓபிஎஸ் நேரடியாக தொடரவில்லை என்றும், வழக்கு தொடர்ந்த மூன்று பேருக்கும் இதற்கான அடிப்படை உரிமை கிடையாது என்றார். மேலும் உள்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளதாகவும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டு 8 மாதங்களுக்குப் பின் வழக்கு தொடர்ந்துள்ளதால் இந்த மனுவை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

மேலும் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தபோது பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படாது என உத்தரவாதம் அளித்ததாகவும், அந்த வழக்கு முடிந்துவிட்டதால் தேர்தல் அறிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் அவர், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி, பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடை கோர முடியாது என்றார். கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் 2 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட உறுப்பினர்களில் 2,100க்கும் மேற்பட்டோரின் ஒப்புதலுடன் ஒற்றைத் தலைமை உள்ளிட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறினார்.

மேலும் ஓ.பி.எஸ். தரப்பினர் தொடர்ந்த வழக்கிற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என்றும் அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், உள்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்றும் தெரிவித்தார். ஜெயலலிதாவை நிரந்தர பொதுச்செயலாளராக அறிவித்துவிட்டு, மீண்டும் அப்பதவியை கொண்டு வருவதாக ஓ.பி.எஸ். தரப்பு கூறும் நிலையில், அப்படி ஏன் கொண்டுவரக் கூடாது என எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை என்று ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், அதிமுக உரிமையியல் தொடர்பான வழக்கு ஏப்ரல் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ள நிலையில், அவசரமாக தேர்தல் அறிவிப்பு வெளியிட வேண்டிய காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினர். மேலும் தேர்தலை நடத்த அனுமதி வழங்கிய நீதிபதிகள், வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர்.

மேலும் வழக்கை 22ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். யுகாதி விடுமுறை நாளில் சிறப்பு அமர்வாக வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்தனர்.

இதையும் படிங்க:தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் - மகளிர் உரிமைத் தொகை குறித்த முக்கிய அறிவிப்பு?

ABOUT THE AUTHOR

...view details