போபால்: இந்தியாவில் அழிந்து போன விலங்கினமான சிவிங்கி புலிகளை, மீண்டும் கொண்டு வந்து இனப்பெருக்கம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, தென் ஆப்பிரிக்க நாடான நமீபியாவிலிருந்து எட்டு சிவிங்கி புலிகள் கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா கொண்டு வரப்பட்டன. அவற்றை மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி திறந்து விட்டார். அவற்றிற்கு ஃப்ரெடி, ஆல்டன், சவன்னா, சாஷா, ஓபன், ஆஷா, சிபிலி, சைசா என பெயர் வைக்கப்பட்டது.
புலிகள் கண்டம் விட்டு கண்டம் கொண்டு வரப்பட்டுள்ளதால், நோய் தாக்குதல் உள்ளிட்டவற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், அவை தனிமைப் படுத்தப்பட்டன. தற்போது எட்டு புலிகளும் ஆரோக்கியமாக உள்ளன. ஒரு மாதத்திற்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த சிவிங்கி புலிகள், தற்போது பழக்கப்படுத்துதல் படலத்தில் நுழைய உள்ளதாக புலிகள் பராமரிப்புக் குழுவில் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.