சத்தீஸ்கர் :90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. முதற் கட்ட தேர்தல் இன்றும் (நவ. 7) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் நவம்பர் 17ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்நிலையில் முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கு இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.
காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தினர். மதியம் 1 மணி நிலவரப்படி சத்தீஸ்கரில் 44 புள்ளி 55 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. மதிய உணவுக்கு பின்னர் மக்கள் தொடர்ந்து வாக்குகளை செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் சுக்மா தொகுதியில் நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நிலையில், பரபரப்பு ஏற்பட்டது. மூன்று வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்த கோப்ரா கமாண்டோ படைப்பிரிவு மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் என 4 பேர் படுகாயம் அடைந்தனர்.