ஹைதராபாத்: சென்னையில் இருந்து தெலங்கானா மாநிலத்திற்கு தினசரி 3 ரயில்கள் வரை இயக்கப்படுகிறது. அப்படி தினமும் இயக்கப்படும் ரயில்களில் ஒன்றான சார்மினார் எக்ஸ்பிரஸ், தடம் புரண்டு விபத்துள்ளாகியுள்ளது.
அதாவது, சென்னை தாம்பரத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் சார்மினார் எக்ஸ்பிரஸ், மறுநாள் காலை 8.10 மணிக்கு தெலங்கானா மாநிலம் ஹைதராபத்தில் உள்ள நாம்பள்ளியில் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும். சிலசமயம், கிராசிங்கில் காத்திருப்பதால் காலை 9 மணிக்கு மேல் நாம்பள்ளி ரயில் நிலையம் வரும்.
இந்த நிலையில், வழக்கம் போல் நேற்று (ஜன.9) சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட சார்மினார் எக்ஸ்பிரஸ், இன்று காலை கடைசி ரயில் நிலையமான நாம்பள்ளிக்கு அருகில் வந்தபோது, எதிர்பாராத விதமாக தடம் புரண்டுள்ளது. இதில் 3 பெட்டிகள் வரை தடம் புரண்டதில், ரயில் கதவுகள் அருகே நின்றிருந்த 5 பயணிகள் வரை லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.