டெல்லி:பஞ்சாப் முதலமைச்சராக இருந்த அமரீந்தர் சிங் கட்சி மேலிடத்தின் அழுத்தம் காரணமாக தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். ராகுல் காந்தியின் விருப்பத்தின் பேரில், கடந்த ஜூலை மாதம் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டார்.
இவருக்கும் முதலமைச்சர் அமரீந்தருக்கும் பனிப்போர் நிலவிவந்தது. அமரீந்தர் தலைமையிலான ஆட்சியை பொதுவெளியில் சித்து விமர்சித்துவந்த நிலையில், இது தொடர்பாக சோனியா காந்தியிடம் அமரீந்தர் தொடர்ந்து புகார் அளித்துவந்தார்.
நீண்டநேர ஆலோசனைக்குப் பின் முடிவு
ஆனால் ராகுலின் ஆதரவு சித்துவின் பக்கம் இருந்ததால், அமரீந்தருக்கு தொடர் நெருக்கடி இருந்துவந்தது. இதையடுத்து, நேற்று (செப். 18) மாலை கட்சி மேலிடத்தின் வலியுறுத்தலின் பேரில் அமரீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின்னர், புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதில் காங்கிரஸ் மும்முரம் காட்டியது.
இந்நிலையில், பல மணிநேர ஆலோசனைக்கு பிறகு பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னியை காங்கிரஸ் தலைமை தேர்வு செய்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத் இதை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
சரண்ஜித் சிங், அமரீந்தர் சிங் அமைச்சரவையில் தொழில்நுட்ப கல்வி அமைச்சராக இருந்தவர். இவர், பஞ்சாப் மாநிலத்தின் முதல் தலித் முதலமைச்சர் ஆவார். மேலும், அடுத்தாண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் அம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு - 73 மாணவர்களுக்கு கரோனா தொற்று