ஹைதராபாத்: நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில், சந்திரயான்-1 திட்டம் வெற்றி பெற்றது. இதனால், நிலவு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவை திரும்பிப் பார்த்தன. இதைத் தொடர்ந்து, சந்திரயான்-2 திட்டம் செயல்படுத்தப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இதுவரை யாரும் தொட்டிடாத நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்த விண்கலம் அனுப்பப்பட்டது. ஆனால், லேண்டர் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டு, அத்திட்டம் தோல்வியடைந்தது.
சந்திரயான்-2 விண்கலத்தின் தோல்வியால் துவண்டு போகாத இஸ்ரோ, அதில் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, மீண்டும் நிலவை நோக்கிய பயணத்தில் இறங்கியது. அதன்படி, பல்வேறு மேம்பாடுகளுடன் சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்தது. சுமார் 615 கோடி ரூபாய் செலவில் இந்த சந்திரயான்-3 விண்கலம் உருவாக்கப்பட்டது. கடந்த முறை லேண்டரில் பிரச்சினை ஏற்பட்டதால், இந்த முறை அதிநவீன தொழில்நுட்பங்களுடன் லேண்டரை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்த மேம்படுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14ஆம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, எல்விஎம்-3 எம்-4 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்னர், இந்த விண்கலம் கடந்த 5ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது. அதன் பிறகு, சுற்றுப்பாதையின் உயரத்தை படிப்படியாக குறைத்து, நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்குவதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். தற்போது 30 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக சந்திரயான்-3 விண்கலம் பயணித்து வருகிறது.