ஹைதராபாத்:கடந்த ஜூலை 14ஆம் தேதி ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எம்எல்வி 3 ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி பூமியைச் சுற்றி முடித்த சந்திரயான் 3, நிலவை நோக்கி செல்லத் தொடங்கியது.
இந்த நிலையில், தானியங்கி லேண்டிங் வரிசையைத் தொடங்குவதற்கு அனைத்தும் (Automatic Landing Sequence - ALS) தயாராக இருந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 23) மாலை 5.44 மணியளவில் லேண்டர் தொகுதி (Lander Module - LM), அதனுடைய நிர்ணயிக்கப்பட்ட இடத்திற்கு வருகை தர காத்திருந்தது.
தானியங்கி லேண்டிங் வரிசையிடம் இருந்து வரும் கட்டளையைத் தொடர்ந்து, லேண்டர் தொகுதி இன்ஜின்களை தானாக இயக்கத் தொடங்கிய நிலையில், இஸ்ரோ செயல்திட்டக் குழு இதனைத் தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்து கொண்டே இருந்து வந்தது. இந்த நிலையில், சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தரை இறங்கி நிலவின் பரப்பைத் தொட்டு உள்ளது.
இந்த சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றிப் பயணத்தின் மூலம் நிலவின் துருவத்தை அடைந்த 4-ஆவது நாடு என்ற பெருமையை இந்தியா அடைந்து உள்ளது. அதேநேரம், முன்னதாக அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை இந்த நிலவில் தரை இறங்கும் முயற்சியில் வெற்றி பெற்று இருந்தது. அது மட்டுமல்லாமல், தற்போது நிலவில் ஆராயப்படாத தென் துருவத்தை அடைந்த முதல் நாடாகவும் இந்தியா மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Chandrayaan-3 : நிலவில் தடம் பதிக்கும் முன் நாமக்கல் மண்ணில் தடம் பதித்த சந்திராயன்-3