தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Chandrayaan-3: விண்ணில் ஏவியது முதல் தரையிறங்குவது வரை.. சந்திரயான்-3 பயணம்..!

Timeline of Chandrayaan-3: நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் இன்று மாலை தரையிறங்கவுள்ளது. ஜூலை 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது முதல் சந்திரயான்-3 விண்கலத்தின் பயணத்தை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

Chandrayaan
சந்திரயான்3

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 4:43 PM IST

பெங்களூரு: நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் நிலவை நோக்கி வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது. சந்திரயான்-3 விண்கலம் இன்று(ஆகஸ்ட் 23) மாலை 6 மணியளவில் நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட உள்ளது. நிலவு ஆராய்ச்சியில் இஸ்ரோவின் முக்கியத் திட்டமாக சந்திரயான்-3 கருதப்படுகிறது. இதனால், உலக நாடுகளின் பார்வை இன்று சந்திரயான்-3ன் பக்கம் திரும்பியுள்ளது. இந்த உச்சகட்ட எதிர்பார்ப்புக்கு இடையில், சந்திரயான்-3 விண்கலத்தின் பயணத்தை தேதி வாரியாகப் பார்க்கலாம்...

ஜூலை 14: சந்திரயான்-3 விண்கலம், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, எல்விஎம்-3 எம்-4 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஜூலை 15: முதல் முறையாக சுற்றுப்பாதை உயரம் அதிகரிக்கப்பட்டு, பூமியின் சுற்றுப்பாதை நிலைநிறுத்தப்பட்டது. அதாவது பூமியிலிருந்து அதிகபட்சம் 41,762 கிலோ மீட்டர் மற்றும் குறைந்தபட்சம் 173 கிலோ மீட்டர் தொலைவில் விண்கலம் இருந்தது.

ஜூலை 17: இரண்டாவது முறையாக சுற்றுப்பாதை உயரம் அதிகரிக்கப்பட்டது. புவி வட்டப்பாதையில் அதிகபட்சம் 41,603 கிலோ மீட்டர் மற்றும் குறைந்தபட்சம் 226 கிலோ மீட்டர் தொலைவில் விண்கலம் இருந்தது.

ஜூலை 22: சுற்றுப்பாதை உயரம் மேலும் அதிகரிக்கப்பட்டு, நிலவுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள பெரிஜி என்ற புள்ளியில் விண்கலம் செலுத்தப்பட்டது.

ஜூலை 25: சுற்றுப்பாதை உயரம் மீண்டும் அதிகரிக்கப்பட்டு, பூமியின் சுற்றுப்பாதையில், பூமியிலிருந்து அதிகபட்சம் 71,351 கிலோ மீட்டர் மற்றும் குறைந்தபட்சம் 233 கிலோ மீட்டர் தொலைவில் விண்கலம் செலுத்தப்பட்டது.

ஆகஸ்ட் 1: புவி வட்டப்பாதையில் இருந்த விண்கலம், புவியீர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கி செல்லும் வகையில் அதன் சுற்றுப்பாதை மாற்றப்பட்டது.

ஆகஸ்ட் 5:ஐந்து நாட்கள் பயணத்துக்கு பிறகு, நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. நிலவிலிருந்து குறைந்தபட்சம் 167 கிலோ மீட்டர், அதிகபட்சம் 18,074 கிலோ மீட்டர் தொலைவில் விண்கலம் பயணித்தது.

ஆகஸ்ட் 6: சுற்றுப்பாதை உயரம் குறைக்கப்பட்டு, குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர், அதிகபட்சம் 4,313 கொண்ட நிலவின் சுற்றுப்பாதையில் விண்கலம் செலுத்தப்பட்டது. விண்கலம் எடுத்த நிலவின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டது.

ஆகஸ்ட் 9:சுற்றுப்பாதை உயரம் மேலும் குறைக்கப்பட்டு, குறைந்தபட்சம் 174 கிலோ மீட்டர், அதிகபட்சம் 1,437 கிலோ மீட்டர் கொண்ட நிலவின் சுற்றுப்பாதையில் விண்கலம் செலுத்தப்பட்டது.

ஆகஸ்ட் 14: நிலவின் மேற்பரப்பில் தரையிறங்குவதற்கான முக்கிய கட்டமான 'orbit circularisation'-ல் சந்திரயான்-3 திட்டம் நுழைந்தது. அதன்படி, நிலவிலிருந்து குறைந்தபட்சம் 151 கிலோ மீட்டர், அதிகபட்சம் 179 கிலோ மீட்டர் தொலைவில் விண்கலம் செலுத்தப்பட்டது.

ஆகஸ்ட் 16: சுற்றுப்பாதை உயரம் மேலும் குறைக்கப்பட்டு, நிலவிலிருந்து குறைந்தபட்சம் 153 கிலோ மீட்டர், அதிகபட்சம் 163 கிலோ மீட்டர் தொலைவில் விண்கலம் செலுத்தப்பட்டது.

ஆகஸ்ட் 17: சந்திரயான்-3 விண்கலத்தின் உந்துவிசை கலனில் இருந்து லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 19: லேண்டரின் வேகத்தை குறைக்கும் பணி தொடங்கப்பட்டது.

ஆகஸ்ட் 20: லேண்டரின் சுற்றுப்பாதை உயரம் மேலும் குறைக்கப்பட்டு, குறைந்தபட்சம் 25 கிலோ மீட்டர் அதிகபட்சம் 134 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்றுப்பாதையில் லேண்டர் செலுத்தப்பட்டது.

ஆகஸ்ட் 21:சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டரை, சந்திரயான்-2ன் ஆர்பிட்டர் வரவேற்றது. இரண்டிற்கும் இடையே வெற்றிகரமாக தகவல் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.

ஆகஸ்ட் 22:லேண்டரில் உள்ள அதிநவீன கேமரா மூலம் சுமார் 70 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டது. அனைத்து தொழில்நுட்ப அமைப்புகளையும் சோதித்த இஸ்ரோ, விண்கலம் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தது.

ஆகஸ்ட் 23: லேண்டர் மாலை 6.04 மணிக்கு, நிலவின் தென்துருவத்தில் பாதுகாப்பாக தரையிரங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சந்திரயான்-3 திட்டத்தில் நாமக்கல் மண்ணின் பங்களிப்பு... புவியியல் நிபுணர் கூறிய சுவாரசிய தகவல்!

ABOUT THE AUTHOR

...view details