நிலவில் தரையிரங்கிய பிரக்யான் ரோவர் ஹைதராபாத்: நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ (Indian Space Research Organisation)அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம், வெற்றிகரமாக அதன் பயணத்தை நிறைவு செய்து, விக்ரம் லேண்டரும் திட்டமிட்ட இடத்தில் வெற்றிகரமாக சாஃப்ட் லேண்டிங் செய்யப்பட்டது.
இதனை அடுத்து ஆய்வுப்பணியைத் துவங்குவதற்காக பிரக்யான் ரோவர் (Pragyan rover) லேண்டரில் இருந்து வெளியே வரும் வீடியோவை இஸ்ரோ அதன் X (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இஸ்ரோ வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 23, அன்று மாலை 6:04 மணிக்கு நிலவில் இறங்கிய பின்னர் சிறிது நேரம் கழித்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் கீழே இறங்கியது. இந்த பிரக்யான் ரோவர் ஆறு சக்கரங்கள் மற்றும் சுமார் 26 கிலோ எடை கொண்டது. இஸ்ரோ பதிவிட்டுள்ள பதிவில், “லேண்டரில் இருந்து நிலவின் மேற்பரப்பில் ரோவர் இறங்கும் காட்சி” என பதிவிட்டு ரோவர், லேண்டரில் இருந்து தரையிறங்கும் வீடியோவையும் பதிவிட்டுள்ளது.
இஸ்ரோ வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் லேண்டரின் மையப்பகுதியில் இருந்த ரோவர், ஒரு சாய்வுதளம் வாயிலாக நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. பிரக்யான் ரோவர் அதன் இயக்கத்தின் போது நிலவின் மேற்பரப்பில் ரசாயன பகுப்பாய்வில் ஈடுபடும்.
ரோவர் அதனைச் சுற்றியுள்ள நிலவின் மண் மற்றும் பாறைகளின் அடிப்படை தன்மையை கண்டறிய அதன் பேலோடுகளான APXS (ஆல்பா பார்ட்டிகல் எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்) மூலம் நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும். ரோவரில் உள்ள மற்றொரு பேலோட், லேசர் இண்ட்யூஸ்டு பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் (LIBS) நிலவின் மேற்பரப்பை பற்றிய மேலும் அறிந்துகொள்ள வேதியியல், கனிம கூறுகளை ஆராயும்.
முன்னதாக, நிலவின் தென் துருவப் பகுதியில் நிரந்தரமாக இருள் சூழ்ந்து இருப்பதால் அங்கு தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது. இதனால் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். சந்திரயான்-3 திட்டத்தில் முதல் முக்கிய கட்டமான லேண்டரை நிலவின் மேற்பரப்பில் ஃசாப்ட் லேண்ட் செய்யும் பணி வெற்றிகரமாக முடிந்தது. இந்நிலையில் திட்டத்தின் முக்கிய கட்டமான மேற்பரப்பை ஆராய்ந்து, அதன் முடிவினை ரோவர், லேண்டருக்கு அனுப்பி, பின்னர் லேண்டர் அதனை பூமிக்கு அனுப்பும்.
இதையும் படிங்க: Pragyan rover: நிலவில் என்ன செய்யப் போகிறது ரோவர் - 14 நாட்கள் இஸ்ரோவின் அடுத்தடுத்த திட்டங்கள்!