பெங்களூரு:கடந்த 2019ஆம் ஆண்டு சந்திரயான் 2 திட்டம் நிலவின் தென் துருவத்தில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்டது. இத்திட்டம் தோல்வியடைந்ததாக கூறப்பட்டாலும், உண்மையில் அது தோல்வி இல்லை என்கின்றனர், விஞ்ஞானிகள். அதாவது இதற்கு முன்பு சந்திரனில் தரையிறங்கிய நாடுகள் கூட லேண்டரையும், ஆர்பிட்டரையும் தனித்தனியாகத்தான் அனுப்பியுள்ளன. அதாவது சந்திரனை சுற்றிவரும் அமைப்பு தனியாகவும், தரையிறங்கி ஆய்வு செய்யும் ரோவர் தனியாகவும் அனுப்பப்படும். ஆனால், இவை இரண்டையும் ஒன்றாக அனுப்பும் முயற்சியைத் தான், சந்திரயான் 2-ல் மேற்கொண்டது இஸ்ரோ.
இதில் சந்திரனில் தரையிறங்கும் திட்டம், தோல்வியடைந்தாலும், ஆர்பிட்டர் இன்னமும் நிலவைச் சுற்றி வந்து தகவல்களை நமக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, வளர்ந்த நாடுகள் செய்யும் செலவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் செலவு பல மடங்கு குறைவு. வளர்ந்த நாடுகள் நிலவில் ரோவரை தரையிறக்க 2,500 கோடி ரூபாய் வரையிலும் செலவிடும் நிலையில், சந்திரயான் 2-க்கு ஆன செலவு சுமார் 900 கோடி ரூபாய். தற்போது சந்திரயான் 3-ல் ஆர்பிட்டர் இல்லாததால் இந்த செலவு மேலும் 300 கோடி ரூபாய் குறைந்து 615 கோடி ரூபாயாக உள்ளது என்கிறது, இஸ்ரோ.