பெங்களூரு: சந்திரயான்-3 திட்டத்தின் படி நிலவின் மேற்பரப்பில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் பிரக்யான் ரோவர் தற்போது தனது பணியை முடித்துப் பாதுகாப்பாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நேற்று (செப்.2) தெரிவித்துள்ளது.
சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான் 3 விண்கலம் 10 கட்டங்களாகப் பயணித்து நிலவைச் சென்றடைந்தது. பின் சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதனால் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு எனும் புதிய சரித்திர சாதனையை இந்தியா பெற்றது.
இதையும் படிங்க:"உலக நாடுகளை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னுக்கு வரும் நாள் தொலைவில் இல்லை" - சி.பி.ராதாகிருஷ்ணன்!
அதன் பின்பு இதுவரை, நிலவின் தென்துருவத்தில் ரோவர் பிரக்யான் நடத்திய ஆய்வில் அப்பகுதியில் சல்பர் இருப்பதை இஸ்ரோ உறுதி செய்தது. பிரக்யானில் உள்ள ஆல்பா பார்ட்டிகல் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோஸ்கோப் (APXS) கருவி நிலவில் தெற்கு பகுதியில் சல்பர் மற்றும் வேறு சில தனிமங்கள் இருப்பதை உறுதி செய்தது. LIBS கருவியானது நிலவில் ஆய்வு செய்து அலுமினியம் (Al), கால்சியம் (Ca), இரும்பு (Fe), குரோமியம் (Cr) மற்றும் டைட்டானியம் (Ti) ஆகிய தனிமங்கள் நிலவின் மேற்பரப்பில் இருப்பதையும் மேலும் மாங்கனீசு (Mn), சிலிக்கான் (Si) மற்றும் ஆக்ஸிஜன் (O) இருப்பதை இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது.
சந்திராயன்-3 திட்டத்தின் படி பிரக்யான் ரோவர் தனது பணிகளை முடித்துள்ளது. இதனால் தற்போது பாதுகாப்பாகத் தூங்கும் நிலைக்கு (Sleeping Mode) மாற்றப்பட்டுள்ளது. மேலும் அதில் உள்ள APXS மற்றும் LIBS பேலோடுகளும் அணைத்து வைக்கப்பட்டுள்ளன. இந்த பேலோடு வழியாகத் தரவுகள் லேண்டரில் இருந்து பூமிக்கு அனுப்பட்டுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சூரிய ஒளியைப் பெறும் சோலார் பேனல் உள்ளதால் இதன் பேட்டரி முழுமையாக உள்ளது. செப்டம்பர் 22, 2023 அன்று சூரிய உதயம் ஆன பின்பு பிரக்யான் ரோவர் மீண்டும் வெற்றிகரமாக ஆன் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லை என்றால் இந்தியாவின் நிலவின் அடையாளமாக அங்கே இருக்கும் என இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:Aditya L1: ஆதித்யா வெற்றியை கொண்டாடும் சிறார்கள்!