ஹைதராபாத்: உறக்க நிலையில் இருந்து மீண்டும் செயல்படத் தயராகி வரும் ரோவர் குறித்து இஸ்ரோ தனது x பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், "சந்திராயன்-3 மிஷன்: விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் விழித்திருக்கும் நிலையை அறிய, அதனுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தற்போது, ரோவரில் இருந்து எந்த தகவலும் பெறப்படவில்லை. தொடர்ந்து ரோவருடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என பதிவிட்டுள்ளது.
கடந்த ஜூலை 14ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆராய உலகின் முதல் நாடாக இந்தியா, சந்திரயான் 3 திட்டத்தை செயல்படுத்தியது. மேலும் சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில், அதனுள் இருந்த 26 கிலோ எடையுடன் ஆறு சக்கரங்கள் கொண்ட பிரக்ஞான் ரோவர், லேண்டரின் வயிற்றுப் பகுதியிலிருந்து சந்திரனின் மேற்பரப்பில் இறங்கி, அதன் பக்கவாட்டு பேனல்களில் ஒன்றைப் பயன்படுத்தி, சரிவுப் பாதையாகச் செயல்பட்ட நிலையில், நிலவின் புழுதி அடங்கிய பிறகு அதன் வேலையை செய்யத் தொடங்கியது.
இந்த வெற்றியின் மூலம் நிலவில் கால் பதித்த நாடுகள் என்ற வரிசையிலும், உலக அறிவியல் வளர்ச்சியிலும் முன்னிற்கும் நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷ்யா நாடுகளின் வரிசையில் நான்காவது வெற்றி நாடாகவும், நிலவின் தென்துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையையும் பெற்றது, இந்தியா.
மேலும், இது குறித்து பிரதமர் மோடி, சந்திரயான் 3 திட்டத்தில் பங்காற்றிய அனைத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் நேரில் சென்று அவரது வாழ்த்தை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து லேண்டர் நிலவில் தரையிறங்கிய நாளான ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என்றும் அறிவித்தார்.
நிலவின் தென்துருவத்தில் உள்ள கந்தகம் மற்றும் உலோகங்கள் குறித்து தொடர்ந்து 10 நாட்களுக்கு ஆய்வு செய்தது, பிரக்ஞான் ரோவர். பின்னர், நிலவின் 14 நாட்களுக்கு சூரிய ஒளியும், இருளும் சமம் கொண்டிருந்த நிலையில், நிலவின் சூரிய ஒளிக்காலத்தில் பிரக்ஞான் ரோவர் அதன் செயல்பாடை நிறுத்திக்கொண்டு ஸ்லீப்பிங் மோட் அதாவது உறக்க நிலைக்குச் சென்றது.
மேலும், இந்த சமயத்தில் சூரிய ஒளியின் மூலம் தனது ஜார்ஜை பூர்த்தி செய்து கொண்டது. இந்நிலையில், அடுத்த 14 நாட்களுக்கு நிலவில் இருள்காலம் என்பதால், பிரக்ஞான் ரோவர் மீண்டும் அதன் ஆய்வைத் தொடங்க தாயாராகியுள்ளது. இது குறித்து இஸ்ரோ தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், "சந்திரயான்-3 திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரில் இருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை" என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று (செப்.22) தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, "ரோவர் அதன் பணிகளை முடித்த நிலையில், ரோவர் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு செப்டம்பர் 2ஆம் தேதி ரோவர் ஸ்லீப் மோடுக்குச் சென்றது. அதைத் தொடர்ந்து APXS மற்றும் LIBS பேலோடுகள் செயலற்ற நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து 14 நாட்களுக்கு செயலிழந்திருந்த ரோவர், சூரிய ஒளியின் மூலம் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 22ஆம் தேதியில் இருந்து எதிர்பார்க்கப்படும் அடுத்த சூரிய உதயத்தில் சூரிய மின்கலம் ஒளியைப் பெறும் வகையில் அமைந்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, "ரோவரில் அமைக்கப்பட்டுள்ள ரிசீவர் இயக்கப்பட்டுள்ளது. இதனால் நிலவின் ஆராய்ச்சிகள் தவிர்த்து மற்றொரு பணிக்கான வெற்றிகரமான விழிப்புணர்வு எதிர்பார்க்கப்படுகிறது. அது இயலாத பட்சத்தில், இந்தியாவின் சந்திர தூதராக (லூனார் அம்பாசிடர்/LUNAR AMBASSADOR) எப்போதும் ரோவர் செயல்படும் என இஸ்ரோ தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இதையும் படிங்க:நாயகன் மீண்டும் வரார்! மீண்டும் பணியை துவங்குமா விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர்! ஆவலுடன் காத்திருப்பு!