ராஜமகேந்திரவரம்: திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திரப் பிரதேசம் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி இன்று (அக்.31) ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து ராஜமகேந்திரவரம் மத்தியச் சிறையிலிருந்த சந்திரபாபு நாயுடு நீதிமன்ற நடைமுறைகள் அனைத்து முடித்து தற்போது சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். அவருக்குத் தெலுங்கு தேசம் கட்சியைச் சார்ந்தவர் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் தெலுங்கு தேசிய கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு செப்டம்பர் 9ஆம் தேதி சிஐடி காவல்துறையினர் கைது செய்யப்பட்டார். 2015ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இருந்தபோது திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிதியில் ரூ.300 கோடி முறைகேடு நடந்துள்ளதாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு தரப்பில் விஜயவாடா சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மற்றும் வீட்டு காவலில் வைப்பது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.