சண்டிகர்: சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கிய நகர்வின் ஒரு பகுதியாக, 2022ஆம் ஆண்டின் மின் வாகன கொள்கையின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதால், மின்சாரம் அல்லாத இரு சக்கர மோட்டார் வாகனங்களின் பதிவை ஜூன் 1, 2023 முதல் நிறுத்துவதற்கு சண்டிகர் நிர்வாகம் தயாராக உள்ளது. இந்த EV (மின் வாகன) கொள்கை, ஐந்தாண்டுகளுக்குப் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாகனங்களை, மக்கள் வாங்கி பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் பதிவை படிப்படியாக நிறுத்தும் கொள்கை அமல்படுத்தப்பட உள்ளது. EV (மின்சார வாகனங்கள்) கொள்கையின் முதல் ஆண்டில், 25,000 இ-சைக்கிள்கள், 1,000 இ-பைக்குகள் மற்றும் 3,000 கார்கள் உட்பட பல்வேறு வகைகளில் 42,000 வாகனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதன் மூலம், கடந்த ஆண்டை விட, எரிபொருளில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கையை 10 சதவீதமும், இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையை, 35 சதவீதமும் குறைக்க சண்டிகர் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
இதைத் தொடர்ந்து, ஆட்டோமொபைல் துறையில், EV கொள்கையின் தாக்கம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. சண்டிகர் நகரத்தில், சுமார் 17 இருசக்கர விற்பனை ஷோரூம்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஷோரூமிலும் 60 முதல் 70 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர், இவ்வாறாக, நகரத்தில் மொத்தம் சுமார் 1,100 பேர் இந்த பணிகளில் உள்ளனர். மின் வாகன கொள்கை, அமல்படுத்தப்படுவதால், இவர்களின் பணிவாய்ப்பு பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.
அதேநேரத்தில், சண்டிகர் நகரில் தற்போதைய காலகட்டத்தில் இ-பைக்குகளை பயன்படுத்துவது என்பது கஷ்டமான காரியம் ஆகும், ஏனெனில், தற்போது கோடைக் காலம் துவங்கி விட்டது. இதன்காரணமாக, வரும் நாட்களில், மின்வெட்டு மற்றும் மின் தடை அதிக அளவில் ஏற்படும் சூழல் உள்ளது. வீடுகளுக்கு அத்தியாவசிய தேவைகளுக்கே போதுமான மின்சாரம் வழங்க முடியாத நிலையில், இ-பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கு எவ்வாறு மின்சாரம் வழங்க முடியும் என்ற கேள்வை எழுந்து உள்ளது.