நொய்டா: உத்தரப் பிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் இந்திய எக்ஸ்போ மையம் மற்றும் மார்ட் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச பால்வள கூட்டமைப்பின் உலக பால்வள உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 12) தொடங்கிவைத்தார். அதன்பின் உரையாற்றிய அவர், "பால்வளத் துறையின் திறன் என்பது ஊரக பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது மட்டுமின்றி, உலக முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு மிகப்பெரும் வாழ்வாதாரமாகவும் உள்ளது.
இந்திய பால்வளத் துறையின் குணாம்சம் என்பது ‘பெருமளவு உற்பத்தி’ என்பதை விட ‘மக்களால் உற்பத்தி’ என்று உள்ளது. ஒன்று, இரண்டு அல்லது மூன்று கால்நடைகளுடன் சிறு விவசாயிகளின் முயற்சியின் அடிப்படையில், இந்தியா மிகப்பெரும் பால் உற்பத்தி நாடாக விளங்குகிறது. இந்த துறை நாட்டில் 8 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. நாட்டில் உள்ள 2 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களைச் சேர்ந்த 2 கோடி விவசாயிகளிடமிருந்து ஒவ்வொரு நாளும் 2 முறை பாலினை கொள்முதல் செய்யும் பால் கூட்டுறவுகள் அதனை வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்கின்றன. வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தில் 70 சதவீதத்திற்கும் கூடுதலாக விவசாயிகளுக்கு நேரடியாக செல்கிறது.
இதுபோன்று வேறு எந்த நாட்டிலும் இல்லை. இந்திய பால்வளத்துறை தொழிலாளர்களில் 70 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர். அதுமட்டுமின்றி, இந்திய பால் கூட்டுறவுகளின் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்கள் பெண்களே. 8.5 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள பால்வளத் துறையின் உற்பத்தி, கோதுமை மற்றும் அரிசி உற்பத்தியின் இணைந்த மதிப்பை விட அதிகமாகும். இவை அனைத்தையும் இயக்குவது இந்திய பெண்கள் சக்தியாகும்.