இந்தியாவில் நிலவிவரும் கோவிட்-19 மூன்றாம் அலை குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் விரிவான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளார்.
இரண்டாம் அலை காலகட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை, உயிரிழப்பு, தடுப்பூசி நிலவரம் ஆகியவற்றோடு தற்போதைய மூன்றாம் அலை காலகட்டத்தையும் அவர் ஒப்பிட்டு தரவுகளை தந்துள்ளார்.
அதன்படி, 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி இரண்டாம் அலை உச்சத்திலிருந்தது. அப்போது இந்தியாவில் மூன்று லட்சத்து 86 ஆயிரத்து 452 தினசரி பாதிப்புகள் ஏற்பட்டு, மூன்றாயிரத்து 59 உயிரிழப்பு, 31 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் இருந்தனர்.
தற்போது இம்மாதம் ஜனவரி 20ஆம் தேதி, மூன்று லட்சத்து 17 ஆயிரத்து 532 தினசரி பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், 380 உயிரிழப்பு மட்டுமே பதிவாகியுள்ளன. 19 லட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
எனவே, இரு காலகட்டத்திலும் ஒரே அளவில் தினசரி பாதிப்பு பதிவாகியிருந்தாலும், உயிரிழப்பு தற்போது வெகுவாகக் குறைந்துள்ளது. மேலும், குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகம் காணப்படுகிறது.
முந்தைய இரண்டாம் அலை காலகடத்தில் இரண்டு விழுக்காடு மக்கள் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்த நிலையில், தற்போது மூன்றாம் அலை காலக்கட்டத்தில் 72 விழுக்காடு மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.
எனவே, மூன்றாம் அலையில் ஏற்பட்டுள்ள மேம்பட்ட சூழலுக்கு தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டதே காரணம் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழலில், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்துவருவது கவலை தரும் அம்சம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இதையும் படிங்க:HOROSCOPE: ஜனவரி 21 ராசிபலன் - உங்க ராசிக்கு எப்படி?