டெல்லி:2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்ட அமர்வு இன்று தொடங்கியது. நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதானி குழுமம் மீதான அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் தாக்கல் செய்த ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் எதிரொலித்தன. அதானி குழும விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கின. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு நாடாளுமன்றம் சாதாரண நிலையை எதிர்கொண்டது.
தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு, அதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமா் மோடி பதில் அளித்தாா். தொடர்து பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்ட தொடரின் முதல் கட்ட அமர்வு ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியது. கூட்டத்தில் எதிர்கட்சி எம்.பி. தீபக் பாய்ஜ், பொதுத் துறை வங்கிகளில் அதானி குழுமம் பெற்று உள்ள கடன் விவரங்கள் குறித்து தகவல் அளிக்குமாறு தெரிவித்தார்.