தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஏலம்!

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவிக்கப்பட்ட பிறகும் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், வடதெரு பெகுதியில் கச்சா எண்ணெய், ஷேல் கேஸ் எடுக்க ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

centre opens auction for oil and gas extraction, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், காவிரி டெல்டா, ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஷெல் கேஸ், நெடுவாசல், வடதெரு, கச்சா எண்ணெய், எரிவாயு
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஏலம்

By

Published : Jun 12, 2021, 4:04 PM IST

டெல்லி: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நெடுவாசலுக்கு அருகே "வடத்தெரு" பகுதியில் கச்சா எண்ணெய், ஷேல் கேஸ் எடுக்கும் ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பிப்ரவரி 9, 2020 காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. டெல்டா மக்களின் நீண்டகால கோரிக்கையான இந்த அறிவிப்பிற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

விவசாயத்தை சிதைக்கும் திட்டங்கள்

இச்சூழலில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவிக்கப்பட்ட பிறகும் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், வடதெரு பகுதியில் கச்சா எண்ணெய், ஷேல் கேஸ் எடுக்க மூன்றாவது முறையாக ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பிற்கு நெடுவாசல் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே நெடுவாசலில் ஷேல் கேஸ் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிராக பெரிய போராட்டங்கள் நடத்தியிருந்தனர். இந்த சூழலில் அதே பகுதியில் ஏலத்திற்கான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இயற்கை வளங்களை பணமாக்கும் திட்டம்

இது குறித்து பேசியுள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "கண்டறியப்பட்ட இயற்கை வளங்களை விரைவில் பணமாக்கும் புதிய வழிகளை ஹைட்ரோ கார்பன் மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் தலைமை இயக்குநர் உருவாக்க வேண்டும். மக்கள் நலனுக்காக, இயற்கை வளங்களை பணமாக்கும் திட்டம் விரைவில் மேற்கொள்ள வேண்டும்.

இந்தியாவின் ஹைட்ரோ கார்பனின் முழு ஆற்றலை வெளிப்படுத்த, உள்நாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒழுங்குமுறைகளை தொடர்ந்து புதுப்பித்து வருகிறது. கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தி துறை சீர்திருத்தங்களில் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. இந்தியாவை முதலீட்டுக்கு ஏற்ற தளமாக மாற்றியுள்ளது" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

காவிரி டெல்டா பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் - கேஸ் கிணறுகளால், விவசாயம் பாதிக்கப்பட்டும், மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களால் பெரும் ஆபத்து நெருங்கியதாலும் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமியின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பை மக்கள் வரவேற்றனர்.

அரசு அறிவித்த பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட இயற்கை எரிவாயுகளுக்கான ஆய்வு, துரப்பணம், பிரித்தெடுத்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. துத்தநாக உருக்காலை, இரும்புத் தாது ஆலை, கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த எஃகு ஆலை, இலகு இரும்பு உருக்காலை, தாமிர உருக்காலை, அலுமினிய உருக்காலைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விவசாயம் மட்டுமே பிரதானம்

தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்பாட்டு அதிகார அமைப்பு உருவாக்கப்பட்டு, முதலமைச்சர் தலைமையில் செயல்படும். இதில் முப்பது உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். இப்பகுதியில் விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை அவர்கள் அளிப்பார்கள் என்றும் 2020இல் நிறைவேற்றப்பட்ட காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டம் கூறுகிறது.

இந்த சட்டப்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து தலா ஐந்து வட்டாரங்களும் வேளாண் பாதுகாப்பு மண்டலத்தின் கீழ் வந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி, திருவரங்குளம், கரம்பக்குடி வட்டாரங்களும் கடலூர் மாவட்டத்திலிருந்து காட்டுமன்னார்கோவில், மேல் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமாராட்சி வட்டாரங்களும் இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வந்துள்ளன.

ABOUT THE AUTHOR

...view details