டெல்லி:கரோனா காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் உரிய முறையில் சென்றடைகிறதா என்பது குறித்த பொது நல மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எம்.ஆர்.ஷா, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் மனு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தரப்பு வழக்கறிஞர் ஐஸ்வர்யா பாடி, கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 28 லட்சம் மக்களை இ-ஷ்ராம் (e-Shram) இணைய முகப்பு மூலம் மத்திய அரசு கண்டறிந்துள்ளதாக தெரிவித்தார்.
அவர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கி வருவதாகவும் கூறினார். வீடு வாரியாக கணக்கெடுப்பு மூலம் உத்தேச பட்டியல் கண்டறியப்பட்டு அனைத்து தரப்பினருக்கும் உதவிகள் சென்றடைய மத்திய அரசு பணியாற்றியதாக மத்திய அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.
தொடர்ந்து பேசிய நீதிபதி ஷா, மத்திய அரசு எந்த விதப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை எனக் குறை சொல்ல விரும்பவில்லை என்றும், கரோனா காலகட்டத்தில் சிறப்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அது தொடர வேண்டும் எனவும் கூறினார். மேலும், தேவைப்படுபவர்களுக்கு உணவு தானியங்கள் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி ஷா தெரிவித்தார்.
உலக பட்டினி பட்டியலில் இந்தியா 107ஆவது இடத்தில் இருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நாட்டில் சராசரியாக 94 சதவீதம் பேர் 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வருவாய் ஈட்டி வருவதாகத் தெரிவித்தனர். மேலும் இ-ஷ்ராம் திட்டத்தில் மகாராஷ்டிரா இயங்காத நிலையில் உள்ளதாகவும், சில மாநிலங்கள் திட்டத்தில் தங்களுக்கான இலக்கை அடையாமல் இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இ-ஷ்ராம் திட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான பதிவுகள் குறித்த தகவல்களை மத்திய அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை டிசம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:கனமழை எச்சரிக்கை: தலைமைச் செயலருடன், வானிலை மையத்தலைவர் ஆலோசனை