டெல்லி :மத்திய தொலைத்தொடர்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அடுத்த தலைமுறைக்கான பாரத் 6ஜி தொலைதொடர்பு கூட்டமைப்பை வெளியிட்டார். நாட்டில் 5ஜி தொழில்நுட்ப சேவை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நிலையில் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான புதிய முயற்சி இது என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
பொதுத்துறை, தனியார் துறை மற்றும் பிற துறைகளின் கூட்டணியாக பாரத் 6ஜி கூட்டமைப்பு இருக்கும் என்றும் நாட்டில் புதிய தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் 6ஜி வளர்ச்சிக்காக செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 6ஜி தொழில்நுட்பத்திற்காக இந்தியா 200க்கும் மேற்பட்ட காப்புரிமைகளைப் பெற்று உள்ளதாகவும், 5ஜி தொழில்நுட்பத்தை காட்டிலும் மேம்பட்ட நம்பகத்தன்மை, நேர தாமதம் குறைப்பு மற்றும் உடனடி தீர்வுகள் போன்ற மேம்பட்ட திறன்களை வழங்க முடியும் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
அடுத்த சில வாரங்களில் தொலைத்தொடர்பு சீர்திருத்தங்களின் அடுத்த தொகுப்பையும் வெளியிட உள்ளதாகவும் 5ஜி தொழில்நுட்பத்தை காட்டிலும் 6ஜி கிட்டத்தட்ட 100 மடங்கு வேகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் 6ஜி தொழில்நுட்பத்தின் மூலம் புதிய தகவல் தொடர்பு பயன்பாடுகளின் வளர்ச்சியை அதிகரிக்கும் என்றார்.