இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி பணிகள் குறித்த விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நேற்றைய(ஜன.20) நிலவரப்படி, மொத்தம் 14 ஆயிரத்து 119 மையங்களில் 7 லட்சத்து 86 ஆயிரத்து 843 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நேற்று மட்டும் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 7 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கர்நாடகாவில் 36 ஆயிரத்து 111 பேருக்கும், ஆந்திரப் பிரதேசத்தில் 22 ஆயிரத்து 548 பேருக்கும் மகாராஷ்டிரத்தில் 16 ஆயிரத்து 261 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை குறைந்தபட்சமாக பிகாரில் 38 பேர் மட்டுமே தடுப்பூசி பெற்றுக்கொண்டனர். தடுப்பூசி போட்டுக்கொண்டதால் இதுவரை யாருக்கும் தீவிர பக்க விளைவுகள் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகளை ட்ராக் செய்து வரும் கோ-வின்(Co-Win) செயலியில் ஏற்பட்ட சில தொழில்நுட்பக் கோளாறுகள் சீர் செய்யப்பட்டு புதிதாக 'Allot Beneficiary' என்ற வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம், தடுப்பூசி பெற வேண்டிய நபர்களை முறையாக திட்டமிட்டு பணிகளை துரிதமாக மேற்கொள்ள வழிவகை செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:கரோனா தடுப்பூசியின் உண்மைகளும் கட்டுக்கதைகளும்!