டெல்லி:இந்தியாவின் ராணுவப் படை, விமானப் படை, கப்பற்படை ஆகிய மூன்று பாதுகாப்பு படைகளும், போர் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கும் வகையில், அவசர கால அடிப்படையில் வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களை வாங்குவதற்கான அனுமதியை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனா உடனான எல்லைப் பிரச்னைக்கு இதுவரை முழுமையான தீர்வு காணப்படாத நிலையில், இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி வரும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் வகையில், நட்பு நாடுகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் முப்படைகள் ஆயுதங்கள் வாங்குவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்களையும், ஆயுத அமைப்புகளையும் வாங்க முப்படைகள் முடிவு செய்துள்ளன என்று மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.