டெல்லி: ஒரே நாடு, ஒரே அடையாள அட்டை, ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்வு, ஒரே தேர்தல் உள்ளிட்ட முழக்கங்களை மத்திய பாஜக அரசு எழுப்பி வருகிறது. ஒரே நாடு, ஒரே அடையாள அட்டை - ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. இதையடுத்து, "ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். கடந்த 2020ஆம் ஆண்டு தலைமைத் தேர்தல் அலுவலர்கள் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் வெவ்வேறு காலகட்டங்களில் தேர்தல் நடைபெறுவதால், தேர்தல் நடத்தை விதிகளால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுகிறது என்றும், தேர்தல் செலவுகளும் அதிகரிக்கின்றன என்றும் தெரிவித்தார். மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல்களுக்கு தனித்தனியாக வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்படுவதால் நேரம் வீணடிக்கப்படுகிறது, அதனால் ஒரே வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது காலத்தின் தேவை என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
அதேபோல், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, "ஒரே நாடு, ஒரே தேர்தல் - ஒரே நாடு, ஒரே வாக்காளர் பட்டியல்" என்ற விவாதத்திற்கு நாம் தயாராக வேண்டும் என்றும், இது தொடர்பான வெவ்வேறு கருத்துக்கள் வெளிவர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.