டெல்லி :பாகிஸ்தானில் இருந்து தகவல்களைப் பெறவும், செய்திகளைப் பகிரவும் பயன்படுத்தப்பட்டதாக 14 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. மத்திய பாதுகாப்புத் துறை, ராணுவம், உளவு மற்றும் விசாரணை அமைப்புகள் வழங்கிய பரிந்துரையை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கிருப்வைசர், எனிக்மா, மீடியா ஃபயர், பிரேயர், பி சாட், சேப்சுவிஸ், விக்கர்மி, நாந்த்பாக்ஸ், கோணியன், ஐ எம் ஓ, எலிமென்ட், செகண்ட் லைன், ஜாங்கி, த்ரீமா ஆகிய 14 செயலிகள் தடை செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த செயலிகள் அனைத்தையும் மத்திய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69 A சட்டப் பிரிவின் கீழ் மத்திய அரசு தடை செய்து உள்ளது.
பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தீவிரவாத அமைப்புகள், இந்தச் செயலி மூலம் காஷ்மீரின் கள நிலவரம் மற்றும் அங்கு நிலவும் சூழலின் உண்மைத்தன்மை குறித்து சிலிப்பர் செல் எனப்படும் தீவிரவாதத்திற்கு துணை நிற்பவர்கள் மூலம் தகவல்களைத் திரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இந்தச் செயலிகள் தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைப்புகள் அளித்த தகவலை அடுத்து தடை செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தச் செயலிகளை உருவாக்கியவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போது தலைமறைவானதாகவும், அவர்களைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.