பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் இன்று (செப்.8) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜவுளித்துறையில் உற்பத்தி சார் ஊக்கத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஜவுளித்துறையின் பத்து வெவ்வேறு பிரிவுகளுக்கு ரூ.10,683 கோடி சிறப்புத்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு உருவாக்கம்
இந்த அறிவிப்பை ஒன்றிய வர்த்தக, தொழிற்சாலைத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ளார். நாட்டின் வேலைவாய்ப்பை அளிக்கும் முன்னணி துறையாக ஜவுளித்துறை திகழ்கிறது. எனவே, இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ் உற்பத்தி, வேலை வாய்ப்பை அதிகரித்து, ஏற்றுமதியை பெருக்க அரசு திட்டமிட்டுள்ளது.
சர்வதேச அரங்கில் நாட்டின் ஜவுளித்துறையை நிலைநிறுத்தும் விதமாக மூன்றாம், நான்காம் கட்ட நகர்களில் ஜவுளி தொழிற்சாலைகள் நிறுவப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் பயன்பெறும் என்றார்.
புதிய திட்டத்தில் கவனம்
மேலும் அவர், இதுவரை இந்தியாவில் பருத்தி நூல் ஜவுளிக்கு பிரதான முக்கியத்துவம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போதைய சூழலில் மனிதனால் உருவாக்கப்பட்டும் பைபருக்கு சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பத்தில் அரசு முதலீடு செய்யவுள்ளது. இதன்மூலம் நாட்டின் ஏற்மதி பன்மடங்கு அதிகரிக்கும் எனக் கூறினார்.
இதையும் படிங்க:தேர்தலுக்குத் தயாராகும் பாஜக: 5 மாநில பொறுப்பாளர்கள் நியமனம்