தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேசிய பாதுகாப்பு அகாதமி தேர்வில் பெண்களுக்கு அனுமதி - nda exams

ஒரு நிரந்தர ஆணையம் அமைத்து, அதன்மூலம் பெண்கள் தேசிய பாதுகாப்பு அகாதமி தேர்வில் பங்கேற்க அனுமதித்து மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக கூடுதல் துணைத் தலைமை வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் பெண்கள்
தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் பெண்கள்

By

Published : Sep 8, 2021, 3:13 PM IST

டெல்லி: மத்திய பாதுகாப்புத் துறையின்கீழ் ராணுவம், கடற்படை, விமானப்படையின் பல்வேறு பிரிவுகளில் பணியில் சேர மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) தேசிய பாதுகாப்பு அகாதமி (NDA) தேர்வுகள் நடத்தப்படும்.

இதற்கான கல்வித் தகுதி 10, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி ஆகும். நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவோருக்குப் பயிற்சிகள் வழங்கப்படும். ஆனால், இந்தத் தேர்வில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு பாலின பாகுபாடு காட்டப்படுவதாக பல ஆண்டுகளாகவே குற்றச்சாட்டு இருந்துவந்தது.

இடைக்கால உத்தரவு

இதையடுத்து, குஷ் கல்ரா என்பவர், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்செய்துள்ளார். அந்த மனுவில், செப்டம்பர் 5ஆம் தேதி நடக்கவிருக்கும் தேசிய பாதுகாப்பு அகாதமி தேர்வில் பெண்கள் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், ரிஷிகேஷ் ராய் அமர்வுக்குமுன் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, 'செப்டம்பர் 5இல் நடைபெறும் தேசிய பாதுகாப்பு அகாதமி தேர்வில் பெண்கள் கலந்துகொள்ளலாம்' என இடைக்கால உத்தரவை பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மத்திய அரசு முடிவு

இந்நிலையில், இவ்வழக்கின் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அமர்வின் முன் மீண்டும் இன்று (செப். 8) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத் தரப்பில் முன்னிலையான கூடுதல் துணைத் தலைமை வழக்கறிஞர் ஐஸ்வர்யா, "நிரந்தர ஆணையம் ஒன்றை அமைத்து, அதன் மூலம் பெண்களை தேசிய பாதுகாப்பு அகாதமி தேர்வில் பங்கேற்க வழிசெய்யும் ஒரு நல்ல முடிவை மத்திய அரசு நேற்று (செப். 7) மாலை எடுத்துள்ளது.

ஆனால், பெண்களுக்குத் தேர்வு நடத்துவதற்கு உரிய கொள்கை வகுப்பது, அதை நடைமுறைப்படுத்துவது, பயிற்சி - உள்கட்டமைப்புகளில் மாற்றம் கொண்டுவருவது ஆகியவற்றை மேற்கொள்ள சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்பதால் இந்த ஆண்டு தேர்வில் பெண்களை அனுமதிக்க இயலாது" என்று கூறினார்.

மேலும், தேசிய பாதுகாப்பு அகாதமி தேர்வை செப்டம்பர் 5ஆம் தேதியிலிருந்து நவம்பர் 24ஆம் தேதிக்கு யுபிஎஸ்சி ஒத்திவைத்துள்ளதையும் அவர் தெரிவித்தார்.

ஆயுதப்படை பெரும் பங்காற்றுகிறது

மத்திய அரசின் வாதத்தைக் கேட்ட நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, "ஆயுதப் படைகளில் பெண்களைச் சேர்க்க முடிவெடுத்துள்ளதும், அது குறித்த பிற பிரச்சினைகள் ஆராயப்பட்டுவருவதையும் அறிந்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

தேசிய பாதுகாப்பு அகாதமியில் பெண்களைச் சேர்ப்பதற்கு மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து கூடுதல் துணைத் தலைமை வழக்கறிஞர் (ASG) ஒரு பிரமாணப் பத்திரத்தைப் பதிவுசெய்ய உத்தரவிடுகிறோம்.

ஆயுதப் படைகளில் பெண்களைச் சேர்ப்பதில் கூடுதல் துணைத் தலைமை வழக்கறிஞரின் அணுகுமுறை பாராட்டுக்குரியது.

ஆயதப் படைகள் நமது நாட்டின் அமைப்பு ரீதியில் பெரும் பங்காற்றிவருகின்றன. அதனால்தான், பாலின சமத்துவத்திலும் ஆயுதப் படைகள் கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறுகிறோம். மத்திய அரசு தற்போது எடுத்துள்ள இந்த முடிவை, முன்னரே எடுத்திருந்தால் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டிய அவசிய இருந்திருக்காது" எனத் தெரிவித்து, வழக்கை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதையும் படிங்க: 40 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details