டெல்லி :சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அருணாசல பிரதேசத்தைச் சோ்ந்த 3 வீராங்கனைகள் கலந்து கொள்ள விசா வழங்க சீனா அனுமதி மறுத்ததற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் வரும் சனிக்கிழமை (செப். 23) தொடங்குகிறது. அதில் வுஷூ எனும் தற்காப்பு கலை சார்ந்த விளையாட்டில் பங்கேற்க 8 போ் கொண்ட இந்திய குழு இன்று (செப். 23) இரவு சீனா செல்ல இருந்தது. இந்நிலையில், அதில் அருணாசல பிரதேசத்தைச் சோ்ந்த 3 வீராங்கனைகளுக்கு விசா வழங்க சீனா அனுமதி மறுத்து உள்ளது.
சீனாவின் எல்லையை ஒட்டி அருணாசல பிரதேச மாநிலம் உள்ள நிலையில், அதற்கு நீண்ட நாட்களாக சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அருணாசல பிரதேசத்தை தன்னோடு இணைத்து அவ்வப்போது சீன அரசு புதிய வரைபடங்களை வெளியிட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் அருணாசல பிரதேச வீராங்கனைகளை இந்தியக் கொடியின் கீழ் விளையாட அனுமதி மறுத்து சீனா விசா வழங்காமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி கூறுகையில், "ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அருணாசல பிரதேசத்தைச் சோ்ந்த இந்திய வீராங்கனைகளுக்கு திட்டமிட்டே சீன அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனா்.
வாழ்விடம் அல்லது இனத்தைச் சாா்ந்து தங்கள் நாட்டு குடிமக்களை வேறுபடுத்திப் பாா்ப்பதை இந்தியா உறுதியாக நிராகரிக்கிறது. அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகவே இருக்கிறது. எப்போதும் அப்படியே இருக்கும். நாட்டின் நலனை பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கான உரிமை இந்தியாவுக்கு உள்ளது.