டெல்லி: டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன் லிவிங்டுகெதர் காதலனால் கொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா குறித்து மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
டெல்லியில் சமீபத்தில் லிவிங் டுகெதர் காதலியைக்கொன்று 35 துண்டுகளாக வெட்டி வீசி எறிந்த காதலன் அஃப்தாப் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அஃப்தாபிற்குத் தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் எனப் பல தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் கவுஷல் கிஷோர், ஷ்ரத்தா வால்கர் கொல்லப்பட்டதற்கு, 'படித்த பெண்கள் லிவ்-இன் உறவுகளில் ஈடுபடக்கூடாது' எனத் தெரிவித்துள்ளார். மேலும் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடி திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார். படித்த பெண்கள் அவர்களது வாழ்க்கையில் பொறுப்பாக இருக்க வேண்டும் எனவும்; லிவிங் டுகெதர் உறவில் இருக்கக்கூடாது எனவும் வலியுறுத்தினார். இவரின் கருத்துக்கு பல கட்சியைச் சேர்ந்தவர்களும், பெண்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.