சென்னை: அதிக அளவிலான கரோனா பரிசோதனை, தனிமைப்படுத்துதல், தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் இந்தியாவில் படிப்படியாக குறையத் தொடங்கிய கரோனா வைரஸ், திடீரென்று அதிகரித்து மக்களை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகிறது.
கடந்த சில வாரங்களாக தொற்றின் வீரியம் அதிகரிக்கத் தொடங்கியதன் விளைவாக உலக அளவில் கரோனா பாதிப்பில் இந்தியா முதலிடத்திற்குச் சென்றுள்ளது. இந்தியாவில் அதிகப்படியான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவுவது குறித்து பலரும் தங்களது விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தொற்று பரவும் நேரத்தில் மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும் சூழல் மிகவும் முக்கியமானது. தகுந்த இடைவெளி, முகக் கவசங்கள் அணிதல், தனிமனித சுகாதாரம் போன்றவை மிகவும் முக்கியமானதாக உள்ள நேரத்தில், தேர்தல் அறிவிக்கப்பட்டதே கரோனா பரவலுக்கு முக்கியக் காரணம் எனப் பலரும் தெரிவிக்கின்றனர். ஏனெனில் பொதுக்கூட்டம், வாக்கு சேகரிப்பு ஆகிய சமயங்களில் பெரும்பாலான மக்கள் மத்திய, மாநில அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றத் தவறிவிடுகின்றனர். இது அவர்களைத் தாண்டி பிறரையும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறது.