டெல்லி : தலைநகர் டெல்லி - என்.சி.ஆர், பாட்னா, லக்னோ, நொய்டா உள்ளிட்ட நகரங்களில் மத்திய அரசு கிலோ 80 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தக்காளி விலை நாள்தோறும் புது உச்சத்தை தொட்டு வருகிறது. பருவமழை, பற்றாக்குறை, வரத்து குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. நாடு முழுவதும் ஒருசேர தக்காளி விலை அதிகரித்து காணப்படுவதால், ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நாடு முழுவதும் பற்றாக்குறை காரணமாக கிலோ தக்காளியின் விலை சராசரியாக 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம், மத்திய அரசு தரப்பில் நாடு முழுவதும் சராசரியாக கிலோ தக்காளியின் விலை 117 ரூபாய் என் நிர்ணயம் செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
நாளுக்கு நாள் தக்காளி விலை அதிகரித்து வரும் நிலையில் சில்லரை நுகர்வோருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நேரடியாக தக்காளியை கொள்முதல் செய்து டெல்லி - என்.சி.ஆர், நொய்டா, லக்னோ, பாட்னா உள்ளிட்ட நகரங்களில் கிலோ 90 ரூபாய்க்கு மத்திய அரசு விற்பனை செய்து வந்தது.
இந்நிலையில், மொத்த விலையில் தக்காளி கிலோ 80 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜூலை 16ஆம் தேதி முதல் விலை மாற்றம் அமலுக்கு வருவதாகவும் நடுத்தர மக்களின் பொருளாதாரச் சுமையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி, நொய்டா, லக்னோ, கான்பூர், வாரணாசி, பாட்னா, முசாபர்பூர் மற்றும் அர்ரா உள்ளிட்ட நகரங்களில் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பின் மூலம் தக்காளி மானிய விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்பட்டு உள்ளது.
விரைவில் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதாக தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பின் தலைவர் விஷால் சிங் தெரிவித்து உள்ளார்.
அண்மையில் தக்காளி விலையை கட்டுப்படுத்த அதனை கொள்முதல் செய்யுமறு தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்புக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :சரத் பவார் - அஜித் பவார், 8 அமைச்சர்கள் திடீர் சந்திப்பு... மராட்டிய அரசியலில் திடீர் சலசலப்பு!