ஹைதராபாத்:தெலங்கானாவில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சிகள் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.01) தெலங்கானாவில் ரூ.13,500 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களைத் துவங்கி வைப்பது, அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் தெலங்கானாவில் விரைவில் தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
தெலங்கானாவில் மஞ்சள் வாரியம் அமைக்க வேண்டும் என்பது அம்மாநில விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையாகும். கடந்த 2019-ஆம் ஆண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை தங்கள் அஸ்திரமாக கையில் எடுத்து இருந்தன. நிஜாமாபாத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ‘அரவிந்த் தர்மபுரி’ மஞ்சள் வாரியம் அமைக்கப்படாவிட்டால் பதவி விலகுவேன் என வாக்குறுதி அளித்து, தேர்தலிலும் வெற்றி பெற்றார்.
பின்னர் நெடுங்காலமாக மஞ்சள் வாரியம் குறித்த அறிவிப்பு வெளிவராத காரணத்தால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். மேலும், எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்தன. இந்நிலையில், தெலங்கானா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி மீண்டும் மஞ்சள் வாரியம் குறித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பிரதமரே நேரில் வந்து விரைவில் மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் என தெரிவித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், இன்று (அக்.04) தெலங்கானா மாநிலத்தில் தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதுகுறித்து அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மஞ்சளைக் கொண்டு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை உருவாக்குவது, உலகளாவிய சந்தையை உருவாக்குவது, புதிய தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவது ஆகியவற்றுக்குத் தேசிய மஞ்சள் வாரியம் உதவிகரமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், இந்த வாரியத்தின் தலைவர் மத்திய அரசால் நியமிக்கப்படுவார் எனவும், வாரியத்தின் குழுவில் ஆயுஷ் அமைச்சகத்தின் உறுப்பினர், பார்மாசூட்டிக்கல்ஸ், விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன், மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை, மூன்று மாநிலங்களில் இருந்து மூத்த பிரதிநிதிகள் (சுழற்சி முறையில்), ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள தேசிய அல்லது மாநில நிறுவனங்கள், மஞ்சள் விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் பிரதிநிதிகள், வணிகத் துறையால் நியமிக்கப்படும் செயலாளர் ஆகியோர் இடம்பெறுவர் என அரசுத்தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.