டெல்லி: மேக் இன் இந்தியா திட்டத்தில் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் சேவையை 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 2050ஆம் ஆண்டிற்குள் ஜீரோ கார்பன் உமிழ்வு திட்டம் என்ற பாரீஸ் ஒப்பந்தத்தின் படி உள்நாட்டிலேயே ஹைட்ரஜன் ரயிலை தயாரிக்கும் பணியில் மத்திய அரசு இறங்கி உள்ளது.
இதற்கானப் பணிகள் விரைவாக நடைபெற்று வரும் நிலையில், 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் ரயில் சேவை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருவதாக அண்மையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் வெளியிட்டார்.
உலக அளவில் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெர்மனி அறிமுகப்படுத்தியது. கார்டியா ஐலேண்ட் என்ற பெயரில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஹைட்ரஜன் ரயில் சேவையை ஜெர்மனி அறிமுகப்படுத்தியது. பிரான்சின் அல்ஸ்டாம் என்ற நிறுவனம் தயாரித்த நிலையில், தற்போது ஜெர்மனியில் 62 ரயில்கள் பல்வேறு வழித்தடங்களில் இயங்கி வருகின்றன.