பெங்களூரு:கர்நாடக மாநிலம் பெங்களூரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. பத்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தாக்குதலுக்கு தேவையான வெடிபொருட்களை அவர்கள் சேகரித்து வருவதாகவும் தகவல் தெரியவந்தது. இதையடுத்து உளவுத்துறையினர் உடனடியாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
உளவுத்துறை அதிகாரிகள், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இணைந்து தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில், தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 வாக்கி டாக்கிகள், 7 நாட்டு துப்பாக்கிகள், 42 தோட்டாக்கள், 4 கையெறி குண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் 2 சாட்டிலைட் போன்கள், வெடிமருந்துகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்கள் சையத் சுஹெல், உமர், ஜானித், முதாசிர் மற்றும் ஜாஹித் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் ஐந்து பேரும் பெங்களூருவில் பெரிய அளவில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டிருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.