டெல்லி :ரயில்வே பணியாளர்களுக்கு 78 நாட்கள் போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டன. இதையடுத்து மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ், அத்தியாவசிய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் முக்கிய முடிவு எடுக்கப்பட்டன.
அதன்படி, ரயில்வே பணியாளர்களுக்கு 78 நாட்கள் போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. 2022- 23 நிதி ஆண்டின் படி ரயில்வே பணியாளர்களுக்கு 78 நாட்கள் போனஸ் வழங்க ஆயிரத்து 968 கோடியே 87 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.
இந்த 78 நாட்கள் போனஸ் தொகை என்பது, தண்டவாள பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்டுகள், ரயில் மேலாளர்கள், ஸ்டேஷன் மாஸ்டர், மேற்பார்வையாளர்கள், டெக்னீஷியன்கள், டெக்னீஷியன்களின் உதவியாளர்கள், அமைச்சரவை ஊழியர்கள் உள்ளிட்ட குருப் சி பிரிவு பணியாளர்களுக்கு இந்த தொகையானது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் ஏறத்தாழ 11 லட்சத்து 7 ஆயிரத்து 346 ரயில்வே பணியாளர்கள் பயன் பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய போக்குவரத்து துறையில் ரயில்வே போக்குவரத்து என்பது இன்றியமையாத ஒன்றாகும். 2022 -23 ஆண்டில் மட்டும் ஆயிரத்து 509 மில்லியன் டன் கணக்கிலான சரக்குகளையும், 650 கோடி எண்ணிக்கையிலான பயணிகளையும் ரயில்வே கையாண்டு உள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவிப்பு!