சென்னை:பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் நல்லோர் வட்டம் சார்பில், "புதிய இந்தியா - பல வாய்ப்புகள்" என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கலந்துகொண்டு, மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது, "இந்தியா மாபெரும் மாற்றத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. உலக அளவில், மற்ற நாடுகளுக்கு சேவை செய்வதில், இந்தியா முன்னோடியாக இருந்து வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, பிரதமர் மோடி விளங்குகிறார். 50 முதல் 60 ஆண்டுகளாக, திறமையான இளைஞர்கள், நாட்டை விட்டு வெளியே சென்று விட்டனர்.
தற்போது அதை கடந்தும் பல துறைகளில் முன்னேற்ற பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறோம். 100 ஆண்டுகளில் நாம் பார்க்காத மாற்றங்களை ஏழு முதல் எட்டு ஆண்டுகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்றைய காலக்கட்டத்தில் உலகளவில் ஏதாவது பிரச்னை என்றால் இந்தியாவை நாடி வரும் சூழல் உருவாகி உள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போர் பிரச்னைக்கு, இந்தியாவால் தான் தீர்வு கொண்டு வர முடியும் என்ற சூழல் உலகளவில் உருவாகியுள்ளது. சில ஆண்டுளுக்கு முன் இந்தியாவின் பொருளாதாரம் 11-வது இடத்தில் இருந்தது. வெகு விரைவில் மேற்கத்திய நாடுகளை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற நிலையைஅ டைய போகிறோம்.
பொருளாதாரத்தில், உலக அளவில் இந்தியா தலைசிறந்த நாடாக மாற அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். விமான போக்குவரத்து துறையை பொருத்தவரையில் உலகில் இரண்டாவது உள்நாட்டு பயண போக்குவரத்துக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. சர்வதேச அளவில் பயணிகள் போக்குவரத்தில் ஏழாவது இடத்தில் உள்ளது.
2013 - 14 ஆண்டுகளில் 70 மில்லியன் பயணிகள் பயணம் செய்த நிலையில், தற்போது 144 மில்லியன் பயணிகள் இந்தியாவில் விமானத்தை பயன்படுத்தி வருகின்றனர். 60 மில்லியன் பயணிகள் சர்வதேச விமானப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை அடுத்த ஐந்தாண்டுகளில் 400 மில்லியன் ஆக உயரும்.