டெல்லி: நாட்டில் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி தூய்மைப் பணியாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்களை கடுமையாகக் கண்டித்து, கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் குறைந்தது 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மேலும், கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது ஏற்படும் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து, அதன் விளைவாக நிரந்தர உடல் பாதிப்பு ஏற்பட்டால், அவர்களின் குடும்பத்திற்கு குறைந்தபட்ச இழப்பீடாக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முற்றிலுமாக ஒழிக்கப்படுவதை, மத்திய மற்றும் மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.
இது மட்டுமல்லாது, தூய்மைப் பணியாளர்களுக்கு வேறு ஏதேனும் குறைபாடுகள் மூலம் பாதிப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.