டெல்லி:அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென் கொரியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சீனா தலைநகர் பீஜிங் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வரலாறு காணாத அளவில் பரவல் அதிகரித்து வருவதாகவும், மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவில் பி.எப்.7 ஒமைக்ரான் மாறுபாடு கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடி வரும் நிலையில், இந்தியாவில் குஜராத் மற்றும் ஒடிசாவில் 3 பேருக்கு அதே வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியா மற்றும் சீனாவில் இருந்து வந்த இரண்டு பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதை அடுத்து விமான நிலையங்களில் சர்வதேச பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
மேலும் பண்டிகைக் காலங்கள் வருவதால் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள், உயிர் காக்கும் கருவிகள், உள்ளிட்ட மருந்துப் பொருட்களை போதிய அளவில் கையிருப்பு வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
கடந்த கரோனா அலையின் போது மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்தன. மக்கள் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைக்காக மருத்துவமனை மருத்துவமனையாக அலையும் அவலம் ஏற்பட்டது. இதையடுத்து ஆக்சிஜன் பிளான்ட்கள் அமைத்து சீரான இடைவெளியில் ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையால் ஆக்சிஜன் தட்டுப்பாடு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.
இந்நிலையில், மாநில சுகாதாரத்துறைகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. அதில் மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் மருத்துவ ஆக்சிஜனின் செயல்பாடுகள் மற்றும் சப்ளையை உறுதிபடுத்தக் கோரி தெரிவிக்கப்பட்டு உள்ளது.