பெங்களூரு:கடந்த செப்.4 ஆம் தேதி மாலை பெங்களூரில் தங்கியிருந்த மதுரையைச் சேர்ந்த திமுக பிரமுகர் வி.கே.குருசாமியை(55) சில மர்ம கும்பல் கொடூரமாக தாக்கிச் சென்றதில் உயிருக்கு ஆபத்தான நிலையில், ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, இந்த வி.கே.குருசாமி யார்? இவரது பின்னணி என்ன? எதற்காக இந்த கொடூர தாக்குதல் அரங்கேறியது என பல கோணங்களில் போலீசார் விசாரணையைத் துவங்கினர். இந்நிலையில், வி.கே. குருசாமியை மர்ம நபர்கள் தாக்கும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் திமுக பிரமுகர் வி.கே.குருசாமி, மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவராகவும், கிளைச் செயலராக இருந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் மண்டல தலைவர் மறைந்த ராஜபாண்டி. கடந்த 2001 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின் போது, போஸ்டர் ஒட்டியதில் இருதரப்பினருக்கும் இடையே துவங்கிய தகராறு இன்று வரை தொடர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும் இவர்கள் இரு குடும்பத்தினரிடையே உள்ள முன்பகை காரணமாக 15க்கும் மேற்பட்ட பழி வாங்கும் கொலை சம்பவங்கள் மதுரையில் அரங்கேறியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி பழிவாங்கும் நோக்கில், 2016 ஆம் ஆண்டு குருசாமியின் மருமகன் முத்துராமலிங்கம் ராஜபாண்டி தரப்பினரால் கொலை செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, முத்துராமலிங்கம் மரணத்திற்கு பழி வாங்க குருசாமி தரப்பினரால் 2017 ஆம் ஆண்டு ராஜபாண்டி மகன் முனியசாமி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, 2019 ஆம் ஆண்டு தேர்தல் பணியின்போது குருசாமி மருமகன் எம்.எஸ்.பாண்டி, ராஜபாண்டி தரப்பினரால் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும், ராஜபாண்டி தரப்பினர் குருசாமியையும், அவரது மகன் மணியையும் பழிவாங்க தொடர்ந்து திட்டம் வகுத்துள்ளாதாக தெரிகிறது. இந்த நிலையில், கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்தாலும் அடுத்தடுத்த நபர்கள் கொலைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
மேலும் 2020 ஆம் ஆண்டு குருசாமி தரப்பைச் சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல், ராஜபாண்டி தரப்பு நபரான கீழ்மதுரை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், முனியசாமி ஆகிய இருவரையும் கொலை செய்ய முயன்றபோது இருவரும் நூலிழையில் தப்பியதாக தகவல் வெளியானது. ஆனால் அவர்களோடு வந்த மற்றொரு நபரான உத்தங்குடி பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்ற இளைஞர் சிக்கியதால், ஆத்திரத்தில் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.
மேலும், போக்குவரத்து சிக்னல் அருகே நடைபெற்ற இந்த கொலை தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதாவது மதுரையில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் திமுக, அதிமுக பிரமுகர்களின் பழிக்குப் பழி கொலை சம்பவங்கள் 15க்கும் மேல் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வி.கே.குருசாமி மீது குற்றம்சாட்டி வழக்கும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதை முடிவுக்குக் கொண்டு வர காவல்துறை பல்வேறு வகையில் முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், சமீபமாக இதுபோன்ற பழிவாங்கும் கொலை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை எனக் கருதப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராவிதமாக பெங்களூரில் தங்கியிருந்த வி.கே.குருசாமியை, ராஜபாண்டி தரப்பினர் கொடூரமாக வெட்டிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வி.கே.குருசாமி ஒரு உணவக்கதில் அமர்ந்திருந்த போது எதிர்பாராத விதமாக உள்ளே நுழைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் கொண்ட மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த பானசவாடி போலீசார் மதுரையில் பிரபல ரவுடியாக வலம் வரும் பாண்டியன் கும்பலை சேர்ந்த கார்த்திக், வினோத்குமார், பிரசன்னா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒருதலை காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்.. கல்லூரி மாணவி மீது தாக்குதல் சம்பவத்தில் இளைஞர் கைது! சிசிடிவி காட்சி!