டெல்லி:நாடு முழுக்க சிபிஎஸ்இ மாணவர்கள் எதிர்பார்த்த 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 31ஆம் தேதி வெளியாகின்றன.
கரோனா இரண்டாம் பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. ஏனெனில் பல்வேறு மாநிலங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெறவில்லை. அஸ்ஸாம், ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக குழப்பம் நீடித்தது.
இந்நிலையில் 1,152 மாணவர்களின் கையொப்பத்துடன் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சிபிஎஸ்இ தேர்வில் மதிப்பெண் வழங்குவது, நேரடித் தேர்வு, சிபிஎஸ்இ வாரியத்தில் நிலவும் குறைகளை களைவது குறித்தும் கூறப்பட்டிருந்தது.
இது தவிர பெற்றோர் தரப்பிலும் இவ்விவகாரம் தொடர்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனால் சிபிஎஸ்இ முடிவுகள் வெளியாவதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்தன. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ வாரியம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக, “ஜூலை 31ஆம் தேதி சிபிஎஸ்இ முடிவுகள் அறிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.