ஹத்ராஸ் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நால்வரை சிபிஐ உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தவுள்ளது. நரம்பியல் தொடர்பான (Brain mapping) சோதனைக்கு அவர்கள் உட்படுத்தப்படுவார்கள் என அலிகார் சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அலிகார் சிறையிலிருந்து காந்திநகருக்கு குற்றம்சாட்டப்பட்டவர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக சிறை கண்காணிப்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார். முன்னதாக, ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை குறித்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்காணிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின இளம்பெண் (19) ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த நான்கு ஆதிக்கச் சாதி ஆண்களால் செப்டம்பர் 14ஆம் தேதியன்று பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். முதுகெலும்பு உடைத்து, நாக்கு வெட்டப்பட்டு பலத்த காயங்களோடு உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்த அந்தப் பெண்ணை, சிலர் கண்டெடுத்தனர்.
அவருக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடிக்க தொடங்கியுள்ள நிலையில், நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உயிரிழந்த பெண்ணின் உடலை செப்டம்பர் 30ஆம் தேதியன்று நள்ளிரவிலேயே காவல் துறையினர் எரியூட்டினர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த பாலியல் வன்படுகொலை வழக்கை கையாண்ட உத்தரப் பிரதேச அரசின் போக்கிற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், முன்னணி சமூக செயல்பாட்டாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.