சென்னை: நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படம் வெளியாகி ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படத்தில், எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா, சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். தமிழில் இப்படத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய வரவேற்பை அடுத்து, இந்தியில் வெளியிட படக்குழு முடிவு செய்து, இந்தியில் இப்படம் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில்தான் ‘மார்க் ஆண்டனி’ இந்தியில் வெளியிட மும்பை சென்சார் போர்டு லஞ்சம் கேட்டுள்ளதாக நடிகர் விஷால் பரபரப்பு புகார் ஒன்றை சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டார். அதில், “மார்க் ஆண்டனி இந்தி படத்தை வெளியிட ரூ.6.5 லட்சம் கேட்டனர். 3 லட்சம் படத்தைத் திரையிடவும், 3.5 லட்சம் சான்றிதழ் வழங்கவும் கேட்டனர். எனது திரை வாழ்வில் இது போன்ற ஒன்றை நான் எதிர்கொண்டதில்லை” என அந்த வீடியோ பதிவில் தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க:“பிக்பாஸில் வயதானவர்களை முதலில் அனுப்பிவிடுவார்கள்” - வனிதா விஜயகுமார் கூறியது என்ன?
இந்த நிலையில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ "X" பக்கத்தில், மும்பை தணிக்கைத் துறை (CBFC) ஊழல் விவகாரம் நடிகர் விஷால் மூலம் முன்வைக்கப்பட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும், இந்த ஊழலை அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும், “இந்த ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் குறித்து மும்பை மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரிய அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ள தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி செப்.29 அன்று மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.