ஹைதராபாத்: டெல்லி மதுபான ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. 100 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும், தெலங்கானா எம்எல்சி உறுப்பினருமான கவிதாவுக்கு தொடர்பு இருப்பதாகவும், விசாரணைக்கு ஆஜராகுமாறும் கடந்த 2ஆம் தேதி சிபிஐ நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில், 11ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) விசாரணைக்கு தயாராக இருப்பதாக கவிதா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த (டிசம்பர் 11ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை ஹைதாராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர்.
முன்னதாக சிபிஐ அதிகாரிகளின் விசாரணையை கண்டித்து கவிதாவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். "உங்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம் கவிதா அக்கா" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் அடங்கிய போஸ்டர்களை கையில் ஏந்தி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.